
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை 6.05 மணிக்கு திடீரென குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உடல் சிதறி பலியாயினர். எட்டு பேர் காயம் அடைந்தனர். ரயில்வே ஸ்டேஷன் நொறுங்கியது. பிளாட்பாரத்தில் வெடிக்காமல் கிடந்த வெங்காய வெடி மூடை கைப்பற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் நேற்று மாலை 6.05 மணிக்கு சோழவந்தான் வந்தது. சோழவந்தானை சேர்ந்த ராமன் (35) , அவரது சகோதரி மகன், அவரது நண்பர்கள் இருவர் சாக்கு மூடைகளுடன் ரயிலில் இருந்து இறங்கினர். ராமன் சுமந்து வந்த சாக்கு மூடை பிளாட்பார மேற்கூரையின் இரும்பு கம்பத்தில் உரசியது. அப்போது மூடையில் இருந்த வெங்காய வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமன், பிளாட்பாரத்தில் நின்றிருந்த வெற்றிலை வியாபாரி பரமசிவம் (60) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம்(48), மேஸ்திரி ஆறுமுகம்(51), டிராபிக் மேன் செல்லத்துரை (31) உட்பட எட்டு பேர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ராமனின் சகோதரி மகன், அவரது நண்பர்கள் சற்று தூரத்தில் சென்றதால் லேசான காயத்துடன் தப்பினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. ரயில் கடைசி பெட்டியின் ஜன்னல் உடைந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். ரயிலை சோழவந்தானிலேயே நிறுத்தி வைத்து அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். அவர்கள் சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்சில் ஊர் திரும்பினர்.
கலெக்டர் மதிவாணன், ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கல், டி.ஐ.ஜி., பாலசுப்ரமணியம், எஸ்.பி.மனோகர், டி.ஆர்.ஓ., தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது மேலும் வெடிகுண்டு கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் போலீசாரும், பத்திரிகையாளர்களும் ஓட்டம் பிடித்தனர். போலீஸ் மோப்பநாய் ரோஜா பிளாட்பாரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டது. இதில் சிமென்ட் பெஞ்சுக்கு கீழ் மஞ்சள் நிற பிளாஸ்டிக் மூடையில் வெடிக்காத ஏராளமான வெங்காய வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
பயங்கர சத்தம் கேட்டது: ஸ்டேஷன் மாஸ்டர் பேட்டி: சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து சரிவர கேட்க முடியாத நிலையில் சிகிச்சை பெறும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். சம்பவம் நடந்த நேரத்தில் நான் ரயில் புறப்படுவதற்காக சிக்னல் போட்டேன். திரும்பும் சமயம் பயங்கர சத்தம் கேட்டது. ஏதோ நடந்துவிட்டது என கருதி ஓட்டம் பிடித்தேன். அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன், என்றார்.
ரயில் பயணி தஞ் சையை சேர்ந்த ஆனந் தன் மனைவி தேவி கூறுகையில், "" ரயிலில் கடைசி பெட்டியில் அமர்ந்து இருந்தோம். ஸ்டேஷன் வந்த சிறிது நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. புகையும், நெருப்புமாக வந்தது. இதில் ரயிலில் இருந்த எனது கணவருக்கு காதிலும், ஒரு வயது மகன் லோகேஷூக்கு உடலிலும் காயம் ஏற்பட்டது'' என்றார்.
டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் கூறுகையில், "" ஆர்.டி.எக்ஸ்., மருந்து இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை. ராமன் என்பவர் வெடி மருந்து கொண்டு வந்தததாக தெரிகிறது,'' என்றார்.
ஸ்டேஷனை ஒட்டி குடியிருப்பில் வசித்து வரும் டிராபிக்மேன் செல்லத்துரையின் மனைவி சகாயடெய்ஸி ராணி கூறுகையில், ""வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம் திடீரென பலத்த சத்தம் கேட்டது. ஸ்டேஷனில் ஏதோ நடந்து விட்டது என ஓடி வந்தோம். இங்கு வந்த பின்னர் எனது கணவர் காயமடைந்தது தெரிந்தது'' என்றார். மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிங்ரோட்டில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த பயங்கர வெடிவிபத்து இதுதான். இதேபோன்ற ரயில்வே ஸ்டேஷன் வெடிகுண்டு சம்பவம் இதற்கு முன் 1997ல் திருச்சியில் நடந்துள்ளது.
காயமடைந்து சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோழவந்தான் மருதப்பன் கூறுகையில், ""நான் மதுரைக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்றபோது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த இடத்தில் என்ன நடந்ததே என்றே தெரியவில்லை. உடனடியாக உயிருக்கு பயந்து ரயிலில் ஏறினேன். அப்போது ரயில் ஜன்னல் கண்ணாடி சிதறல்கள் முதுகில் பட்டதில் காயம் ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை'' என்றார்.
ரயில்கள் தாமதம்: குண்டு வெடிப்பு சம்பவத்தால் இரவு 8.20 மணிக்கு மதுரை வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் கொடைரோட்டில் நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக மதுரை வந்தது. மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல் செல்லும் ரயில், தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் - சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறிது தாமதமாக கிளம்பின. பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட பிற ரயில்கள் வழக்கமான நேரத்தில் புறப்பட்டன.
No comments:
Post a Comment