கோவை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின்போது மைனராக இருந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது விதிமுறைக்கு மாறானது என்று கூறி 2 பேரை விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அத்வானி தேர்தல் பிரசாரம் செய்ய கோவைக்கு வந்தார். பல இடங்களில் கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் 58 பேர் மரணம் அடைந்தனர். 200 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த கோவை சிறப்பு கோர்ட்டு 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
3 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை 64 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2007 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்த சம்பவத்தில் இறந்தவர்களுடைய தந்தை ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இதேபோல, விடுதலை செய்யப்பட்ட மதானி உள்பட 8 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த அப்பீல் மனுவில் கூறியிருந்தார்.
இந்த அப்பீல் மனுக்களை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜிபுர் ரகுமான், முகமது அம்ஜத்அலி ஆகியோரை விடுதலை செய்யும்படி நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இருவரும் தொடர் வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்தார்கள். முஜிபுர் ரகுமானுக்கு அப்போது 17 ஆண்டும் ஒரு மாதமும் தான் வயது ஆகியிருந்தது. இதுபோல அம்ஜத் அலிக்கு 16 ஆண்டும் 10 மாதமும் வயதாகி இருந்தது. ஏற்கனவே உள்ள விதிமுறைபடியிலும், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அடிப்படையிலும், இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டப்படி பாதுகாப்பு பெற இவர்களுக்கு உரிமை உள்ளது. இவர்களுக்கு எதிராக தடா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தகுதி கிடையாது. இளஞ்சிறார் வாரியம் இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் இவர்கள் மீதான வழக்கை மீண்டும் இளஞ்சிறார் வாரியத்துக்கு அனுப்பினால் எந்த விதமான நோக்கமும் நிறைவேறப்போவதில்லை. ஆகவே, இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லையென்றால், இவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும். இளஞ்சிறார்கள், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவேண்டும். அவர்கள் மீது குற்ற முத்திரை இருக்கக்கூடாது என்பதற்காக சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே இவர்கள் இனி ஒருநாள்கூட சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
THANKS : TMMK
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment