ASSALAMU ALAIKKUM - Your Feedbacks and Wishes to bathuru86@yahoo.com

Wednesday, September 30, 2009

தேக்கடி படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

கேரள மாநிலம் தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த மேலும் 15 பேர் உடல்களும் அடையாளம் காணப்பட்டது.

கும்பகோணம் ஆதித்தன் (12), கோவை ஜெயப்பிரகாஷ், ராகுல், அனுசியாதேவி, பல்லடம் இலக்கியா, பிரகதீஸ்வரி, சுதா, பெரியகுளம் தரணி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், புதுச்சேரி [^] ஆனந்த், சரவணன், விஜயகுமார் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

படகு விபத்தில் இதுவரை 31 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்...

இந்த கோர விபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் - பிரதீப் குமார் ஜெயின், அவருடைய மனைவி சந்தியா ஜெயின், மகள் ஸ்ருதி, அவருடைய கணவர் பாலா தத் மற்றும் அல்டா, ஹரி, சுதா, அருண் குமார், ஹரீந்திர குமார் ஆகியோர்.

விபத்து குறித்த தகவல் அறிய...

விபத்து குறித்தும், உயிரிழந்தோர், காயமடைந்தோர் குறித்த தகவல் அறிய தொலைபேசி எண்களை கேரள அரசு அறிவித்துள்ளது.

அவை -

கட்டுப்பாட்டு அறை (கேரளா) - 0471-2333198.

சுற்றுலாத்துறை - 0486-9222620/9222111, 94460 52361, 0-9446052361, 04869-222620.

கேரளா ஹவுஸ் (டெல்லி) -011 23342320.

தேக்கடி அருகே உள்ள பெரியார் புலிகள் சரணாலயப் பகுதியைப் பார்வையிட படகு சவாரியை கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. இங்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சவாரி நடத்தப்படும்.

ஆனால் நேற்று படகு சவாரி முடிவடையும் நேரமான மாலை 4 மணிக்குத்தான் விபத்தில் சிக்கிய படகு கிளம்பிச் சென்றுள்ளது. கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தூரம் வரை அந்தப் படகு சென்றுள்ளது. யானைகள் அதிகம் காணப்படும் மனக்காவலா என்ற இடத்தில் படகு வந்தபோது ஏராளமான யானைகள் கூட்டமாக நின்றிருந்ததைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஒட்டுமொத்தமாக படகின் ஒரு பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனால் படகு நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டது. அப்போது இன்னொரு படகில் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்த்து அலறினர். பின்னர் கரைக்கு தகவல் போனது.

மூழ்கிய படகில் இருந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பி நீந்தத்த தொடங்கினர். படகில் தொங்கிக் கொண்டிருந்த அவசர கால டயர் டியூபுகளை சிலர் பிடித்துக் கொண்டு தத்தளித்தனர்.

தகவல் அறிந்ததும் வனத்துறை-சுற்றுலா துறை பணியாளர்கள் அதிவேக மீட்பு படகுகளில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.

மீட்பு பணியில், மாநில அரசுக்கு உதவுவதற்காக, கடற்படையை சேர்ந்த 50 நீச்சல் வீரர்களைக் கொண்ட குழுவினரும் கொச்சியில் இருந்து தேக்கடிக்கு விரைந்தனர்.

தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் 31-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரிதாபமாக இறந்துவிட்டனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. பலியானவர்களில் 8 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள்.

தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டு இருந்த 40 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பன் தெரிவித்தார். மீட்கப்பட்ட பயணிகள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

படகில் பயணம் செய்தவர்களில், ஏறத்தாழ 50 பேர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, பலியானவர்களில் பெரும்பான்மையோர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெளிநாட்டு பயணிகள் சிலரும் அந்த படகில் பயணம் செய்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவில் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டர்கள் மூலம் மின்விளக்குகளை எரியச்செய்து இரவிலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் [^] ஏ.கே.அந்தோணி விபத்து குறித்து அதிர்ச்சியும், ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்தார். மீட்பு பணியில் உதவும்படி கடற்படைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

3வது பெரிய விபத்து...

கடந்த 7 ஆண்டுகளில் கேரளாவில் நடந்த 3வது பெரிய படகு விபத்து இது.

2002ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முஹம்மா மற்றும் குமரோகம் இடையே வேம்பாநாடு ஏரியில் படகு ஒன்று மூழ்கி 29 பயணிகள் உயிரிழந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு ஏர்ணாகுளம் மாவட்டம் தெட்டக்காடு பறவைகள் சரணாலயப் பகுதியில், பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு மூழ்கியதில் 15 குழந்தைகள் உயிரிழந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு...

தேக்கடி படகு விபத்து குறித்து விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் [^] அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருவாய்த்துறை கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் தகவல் கொடுக்க இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment